நோயாளி போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீஸ் ...கோவை சிங்கநல்லூர் தேவராஜ்க்கு மறக்க முடியாத சம்பவம்..

 கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கிளினிக் வைத்து சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜை, நோயாளி போல் நடித்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் சாலையில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமலேயே கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு ரகசிய தகவல் வந்தது.



இதையடுத்து ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மற்றும் போலீசார் அந்த கிளினிக்கிற்கு வந்தார்கள். அங்கு மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிக்கும் நபரை கையும், களவுமாக பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள். 


இதற்காக அதிகாரிகள் தங்களுடன் வந்த டிரைவர் மற்றும் 2 போலீசாரை நோயாளி போல் அந்த கிளினிக் உள்ளே அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர் என்று கூறிக் கொண்டு 54 வயதாகும் தேவராஜ் என்பவர் சிகிச்சை அளித்தார்.

உடனே விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் தேவராஜிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழை கேட்டார்கள். இதில், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது உறுதியானது.மேலும் விசாரணையில், தேவராஜ் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதும், அங்கு கிளினிக் வைத்து நடத்தி வந்த டாக்டர் இறந்து விட்ட நிலையில் தேவராஜ் கடந்த ஒரு ஆண்டாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் உறுதியானது.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜசேகரன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் தேவராஜை மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை அதிகாரிகள் மடக்கி பிடித்த சம்பவம் கோவை சிங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.