மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் வகுத்துமலை அடிவாரத்தில், 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை நாளை (ஜனவரி 24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரை 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது. தற்போது இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு நடைபெற்றது. இதில் அயிரக்கணக்கான காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நாளை அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த மஹிந்திரா தார் தற்போது, ஜல்லிக்கட்டு அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளது.

.png)

.png)